கொரோனா பீதி: அரபு நாடுகளில் இருந்து 26ஆயிரம் பேர் இந்தியா திரும்புகின்றனர்…

மும்பை:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு, பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ள நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிகைகளயும் தீவிரப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 18ந்தேதி, வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய தாராள வணிக அமைப்பை சேர்ந்த நாடுகள், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிகள் வருவது, முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன், குவைத் ஆகிய நாடுகளில் இருந்தோ, அந்த நாடுகளின் விமான நிலையங்களில் இறங்கி ஏறியோ இந்தியா வருகிற பயணிகள் 14 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி தொடங்கி உள்ளது.

படிப்படியாக அழைத்து வரப்படும் சுமார்  26,000 பேர்களும் மும்பையில் உள்ள மருத்துவ மனைகளில் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தினசரி 23 விமானங்கள் மூலம் கல்ஃப் நாடுகளில் உள்ள இந்தியர்கள் மும்பை அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.