டெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று விடுமுறையை கொண்டாடுவோர் அதை தவிர்க்கின்றனர்.

சீனாவில் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசால் 3000 பேர் பலியாகி இருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சுகாதார நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று விடுமுறையை கொண்டாடுவோர் அதை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்வோர் பெரும்பாலானோர் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிடுகின்றனர் அல்லது பயண திட்டத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, பாங்காக், பாலி ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கான முன்பதிவில் 25 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதே தாக்கம் இத்தாலிக்கான போக்குவரத்திலும் காணப்படுகிறது.

இது குறித்து பிரபல சுற்றுலா தளமான மேக்கை டிரிப் இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி கூறி இருப்பதாவது: கொரேனா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு  முன்பதிவு செய்வதில் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

இந்த இடங்களுக்கான விமானங்கள் 20-30 சதவிகிதம் குறைந்துவிட்டன. விடுமுறை நாட்களில் வெளிநாட்டுகளுக்கு தங்கள் பயணங்களை திட்டமிடும் பயணிகளில் 35 சதவிகிதம் பேர் தங்களின் பயண திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு சந்தைக்கான விமான கட்டணங்கள் பெரிதாக மாறவில்லை, அதேசமயம் சர்வதேச விமானங்களுக்கான கட்டணங்கள் குறைந்துவிட்டன. மேலும், இந்திய பயணிகள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர் என்றார்.