டெல்லி:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆயுஷ் மருத்துவர்களுக்கும்,  ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதுவரை கொரோனா தடுப்புக்கு அலோபதி மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆயுஷ் மருந்துகள் மற்றும் மருத்துவர்களும் பணிகளை மேற்கொள்ள  பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ்  சித்தா, ஓமியோபதி , ஆயுர்வேத, யோகா–நேச்சுரபதி, யுனானி போன்ற மாற்றுமுறை மருத்துவங்கள் உள்ளன. இந்த மாற்றுமுறை மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன்  பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.

அப்போது,  இந்த நாட்டை ஆரோக்கியமானதாக வைத்திருப்பதில் ஆயுஷ் துறையினருக்கு மிக நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்த துறையினர் நாடு முழுவதும் அனைத்து தளத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறார்கள். எனவே கொரோனா வைரஸ் தடுப்பில் இந்த மருத்துவத்தை அவர்கள் பயன்படுத்துவது முக்கியமாக அமைகிறது.

நீங்கள் (ஆயுஷ் மருத்துவர்கள்) உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள விதிமுறைகளின்கீழ் செயல்படுவதுடன், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நல்ல நடை முறைகளை பரப்ப வேண்டும்.

இதில் உங்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

சானிடைசர் திரவம் போன்றவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிற இந்த காலகட்டத்தில், இத்தகைய அத்தியாவசிய பொருட்களை தயாரிக்க ஆயுஷ் மருந்து தயாரிப்பாளர்கள் தங்களது வளங்களை பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், மக்களிடம் போய்ச்சேரவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டெலிமெடிசின் தளத்தை ஆயுஷ் மருத்துவர்கள் பயன்படுத்தலாம்.

இவ்வாறு கூறினார்.