சிங்கப்பூர்:

லகின் மிகச்சிறந்த சுற்றுலா  ஸ்தலங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்றான  சிங்கப்பூருக்கு, சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சுமார் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை சுற்றுலாப்பயணிகளை இழந்து வருவதாக அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு உலக நாடுகளை மிரட்டிய சார்ஸ் வைரஸ்  தாக்குதலுக்கு பிறகு, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

சுமார்  நாள் ஒன்றுக்கு 18ஆயிரம் பேர் முதல் 20ஆயிரம் பேர் வருகை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.  இது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதை மீட்க கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து, சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) சுற்றுலா மீட்பு நடவடிக்கை பணிக்குழுவை (டி.ஆர்.சி) அமைத்துள்ளது. இதில் தனியார்  மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுடன், சுற்றுலாத்துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தலைமை அதிகாரி கெய்த் டான், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சிங்கப்பூர் தினசரி 18ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை இழந்துள்ளது,  இது சுமார் 30 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலா பார்வையாளர்களின் வருகை மற்றும் வருமானம் கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குறைந்து வருகிறது.

2019 ஆம் ஆண்டில் பார்வையாளர்களின் வருகை 3.3 சதவீதம் உயர்ந்து 19.1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது, இதன் காரணமாக அரசுக்கு  மொத்தம் 27.1 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது, இது 0.5 சதவீத வளர்ச்சி என்று தெரிவித்தவர், தற்போது  தொழில்துறையின் ஆதரவோடு, கூட்டு பணிக்குழு மூலம், சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதுகுறித்து திட்டமிட்டு வருவதாகவும்,  சிங்கப்பூர் சுற்றுலா வணிகத்தை மாற்றுவது மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து  மீள்வது  கடினமானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.