டெல்லி: கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது விளையாட்டு பிரபலங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஊரடங்கை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டத்தை தடுக்க எல்லா மாநிலங்களிலும் போலீசார் ரோந்து பணியில் இறங்கி இருக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, போலீஸ் ரோந்து பணியில் விளையாட்டு உலக பிரபலங்களான கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா, காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் அகில்குமார்,  கபடி அணி முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜோகிந்தர் சர்மா, அகில்குமார் ஆகியோர் அரியானா மாநில போலீஸ் துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறார்கள். அஜய் தாகூர் இமாச்சல பிரதேசத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். போலீசாருக்கு தலைமை வகித்து தாங்கள் பணியாற்றும் பகுதியில் உள்ள சாலைகளில் ரோந்து சுற்றி வரும் இவர்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து ஜோகிந்தர் கூறி இருப்பதாவது: எங்கள் கடமை நேரம் காலை 6 மணியளவில் தொடங்குகிறது, அத்தியாவசிய அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். எந்தவொரு நல்ல காரணமும் இல்லாமல் மீற முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.