டெல்லி:
மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஐஐடி  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலானது, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கட்டுக்குள் இருந்த நிலையில் ஜூன், ஜூலையில் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் மேலும் 587 போ உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்து இருப்பதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனமும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து, கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தின. அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி,  கொரோனா வைரஸ் வெயில் காலத்தில் எவ்வாறு இருந்தது, மழை, குளிர் காலங்களில் அதன் பரவும் வேகம் எப்படி இருக்கும், இந்தியாவில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்  என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த 2003–ல் பரவிய சார்ஸ் வைரஸ், 2009–ல் பரவிய ஏஎச்1என்1 இன்ப்ளூயன்ஸா வைரஸ், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் காலநிலைக்கு ஏற்பவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் பரவும் வேகத்தில் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது.
காலநிலையில் ஏற்படும் மாற்றம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.
வெயில் அதிகரித்தால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே வேளையில் மழை, குளிர் காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் வெயில் காலத்தில் இருந்ததைவிட வேகமாக இருப்பதும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மழைக்காலத்தில் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவும் காலக்கட்டத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு சாதகமான சூழல் என்பது தெரிய வந்துள்ளது.
வெயிலில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்தால் கூட 0.99 சதவீதம் கொரோனா பரவும் வேகம் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.