சீனாவுக்கு செல்லவோ, வரவோ தடை இல்லை: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு பயணம் செல்லவோ, அங்கிருந்து வரவோ தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

சீனாவுன் வுகான் மாநிலத்தில் இருந்து பரவிய  கொரோனா வைரஸ், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொடிய நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது நோய் தொற்று சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அண்டைய நாடுகளுக்கும் பரவி வருவதால், பல நாடுகள் சீனாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து வருகின்றன. இந்தியாவும் சீனாவுக்கு விமான சேவை உள்பட அனைத்து தொடர்புகளையும் தற்காலிகமாக துண்டித்து இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஸ்குமார், சீனாவுக்கு பயணம் செல்லவோ, அங்கிருந்து வரவோ எந்தவித தடை விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.