சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 23 பேருக்கு இருந்த நிலையில்,  மேலும் 3 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 26-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  கடந்த இரு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. தற்போது, 26 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  இந்தோனேசிய நாட்டிலிருந்து, சுற்றுலாப் பயணமாக தமிழகத்திற்கு வந்த 4 பேர் மற்றும் அவர்களின் சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,துபாயில் இருந்து திரும்பிய ஒருவர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை 26 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறி உள்ளார்.

தமிழகத்தில், இதுவரை  வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்‍கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 15 ஆயிரத்து 492 பேர், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமான 890 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 757 பேருக்‍கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்ததாகவும், 26 பேருக்‍கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…