ரு காலத்தில் ’பிளேக்’ நோய் உலகை அச்சுறுத்தியது. பின்னர் ‘எய்ட்ஸ்’. இன்று ‘கொரோனா’.

கொரோனாவுக்கு இதுவரை 3, 400 பேர் உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர். ஒரு லட்சம் பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாக சமீபத்திய தகவல்.

உலகப்போர்களுக்கு பிறகு ஒவ்வொரு நாடும் அஞ்சி நடுங்கி கொண்டிருப்பது அநேகமாக கொரோனாவுக்காகத் தான் இருக்கும்.

நிறைய நாடுகள் வெளிநாட்டுகாரர்களுக்கு கதவை அடைத்துவிட்டன. ’இது எங்க ஏரியா ,கிட்ட வராதே’ என பகிரங்கமாகவே சொல்லிவிட்டன.

இந்தியாவில் கொரோனாவால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கும்பலாக கூட வேண்டாம் என அனைத்து மாநில மக்களையும் நேற்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு பல தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

கொரோனாவால் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஹ்மஹாலும் மூடப்பட உள்ளதாக தகவல்.
தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ராவிலும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் தாஜ்மஹாலை மூடுமாறு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின், மத்திய சுற்றுலா அமைச்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவர், அகில இந்திய மேயர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

‘’ கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, ஒரு தற்காப்பு நடவடிக்கையாக, தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கலையும் தற்காலிகமாக மூட வேண்டும்’’ என ஆக்ரா மேயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கோரிக்கையை ஏற்று தாஜ்மஹால் விரைவில் தற்காலிகமாக மூடப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் முகல் தோட்டம் மார்ச் 7 ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்களுடன் பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

-ஏழுமலை  வெங்கடேசன்