மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியின் போது, சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள்  எச்சரிக்கை விடுத்தன.

இந் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம்  முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

தண்டனை மட்டுமல்லாது, 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை அபாதமும் விதிக்கப்படும்.  மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, அவர்களின் சிகிச்சை மையங்களோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தப்பட்டால் குற்றவியல்  தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தாக்கியவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்படது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.