பனாஜி: கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் 31 வரை மூட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா, உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது.

67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், கேளிக்கைக் கூடங்களை மார்ச் 31 வரை மூட கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டு உள்ளார்.

ஜிம்கள், பொது நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள் மற்றும் கிளப்புகள் மார்ச் 31 வரை மட்டுமே மூடப்படும் என்றும் அவர் உத்தரவிட்டு உள்ளார். இதேபோன்று மேற்கு வங்கத்திலும் கல்வி நிலையங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.