சீனாவில் கொரோனா தாக்கி குணமானவருக்கு மீண்டும் கொரோனா தொற்று: மருத்துவ உலகம் அதிர்ச்சி

சென்னை: சீனாவின் செங்குடு நகரில் புதிய கொரோனா வைரஸ் (SARS CoV 2 ) பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் மறுமுறை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதில் இது போன்ற Re infection எனப்படும் மறுமுறை அதே வைரஸ் தொற்றுக்கு ஆளாவது என்பது பலத்த முட்டுக்கட்டையாக இருக்கும். சீனாவின் செங்குடு நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 10வது நாள் மீண்டும் சளி இருமல் காய்ச்சல் ஏற்பட, மறுபடியும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மற்றொரு 71 வயது நபருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு 27 நாட்கள் வரை நோயின் அறிகுறிகள் தோன்றவில்லை. 27வது நாள் நோயின் அறிகுறிகள் மெல்ல, மெல்ல தோன்றியுள்ளன.

இது நாம் ஏற்கனவே புதிய  கொரோனா வைரஸ்க்கு  நியமித்து வைத்திருந்த காத்திருப்பு காலமான 14 நாட்கள் என்பதை தகர்த்து இருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறி உண்டாக்க காத்திருக்கும் காலம் 14 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என்பது ஊர்ஜிதமாகிறது.

பல நாடுகளும் சீனாவில் இருந்து வந்த பயணிகளை 14 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றை உலகம் முழுவதும் பரவ விடாமல் தடுக்க இருக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்த பொலிட் பீரோ கூட்டத்தில். இன்னும் நம் நாட்டை தாக்கியுள்ள கொள்ளை நோய் அதன் உச்சத்தை தொடவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்று சிவகங்கையைச் சேர்ந் மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.