டில்லி

ரசு பெரிய நிறுவனங்களின் கார்பரேட் வரியை குறைக்க இயலாத நிலையில் உள்ளதால் நீண்ட கால மூலதன ஆதாய வரியும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கார்பரேட் வரியை 25% ஆக குறைப்பதாக கடந்த 2016 ஆம் வருட நிதிநிலை அறிக்கை வழங்கும் போது உறுதி அளித்தார். அடுத்த வருடமான 2017 ஆம் வருட நிதி நிலை அறிக்கையின் போது அவர் கார்பரேட் வரியை ரூ. 5 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 29% ஆக குறைத்தார்.

அந்த நிதி நிலை அறிக்கையில் புதிய நிறுவனங்களுக்கு 25% கார்பரேட் வரி விதிக்கப்பட்டது. அதன் பிறகு அது 2018 ஆம் வருட நிதி நிலை அறிக்கையில் ரூ. 50 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

தற்போது நீண்ட கால ஆதாய வரிகள் ரூ. 1 லட்சத்துக்கு மேற்படும் போது 10% விதிக்கப்படுகின்றன. இந்த வரியை அருண் ஜெட்லி கடந்த 2018 ஆம் வருடம் அறிமுகம் செய்து அதை 2019 இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் தொடர்ந்தார்.

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்க உள்ளார்.

தற்போதுள்ள நிலையில் அரசுக்கு கடும் பொருளாதார நெருக்கடி உள்ளதால் வரிகளை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் கார்பரேட் வரிகள் இம்முறை குறைக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது. மேலும் நீண்ட கால மூலதன ஆதாய வரிகளை மேலும் அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.