அமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி  டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் லஞ்சஒழிப்பு துறைக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அறப்போர் இயக்கம்  என்ற அமைப்பு சார்பில் அமைச்சர் வேலுமணி மீது குற்றம் சாட்டி பொதுநல மனு செய்யை உயர்நீதி மன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கோவை மாநகராட்சிக்கு மட்டும் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரூ. 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் குறிப்பிட்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள். அதுபோல சென்னை மாநகராட்சியில், ரூ. 20 கோடி வருமானம் ஈட்டிய நிறுவனங்களே மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்த பணியில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வதில் தமிழக உள்ளாட்சித்துறை  அமைச்சர் வேலுமணி பெரும் தொகை ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் நீதிமன்றம்  உருவாக்கவேண்டும். என்றும், அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது,  மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும்,  அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தமிழக தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். தொடர்ந்து விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.\

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ARAPPOR IYAKKAM, chennai high court, corporation tender scan, COURT NOTICE, Minister SPVelumani, Vigilance department, அமைச்சர் வேலுமணி, சென்னை உயர்நீதி மன்றம், சென்னை ஐகோர்ட்டு, மாநகராட்சி டெண்டர் முறைகேடு, லஞ்ச ஒழிப்புத்துறை
-=-