போக்சோ சட்டத்தில் திருத்தம்: சிறுவர் சிறுமியர் ஆபாச தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை

டில்லி:

சிறுவர் சிறுமியர் ஆபாச தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறுவர் சிறுமிகளை  பாலியல் ரீதியாக சித்தரிக்கும் தகவல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.

தற்போது பாலியல் தொடர்பாக புகார்கள் ஜாமினில் வெளி வரமுடியாத போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போது போக்சோ சட்டத்தின்  15வது பிரிவின்படி, பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு 3  ஆண்டுகள்  சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என உள்ளது. இதை திருத்தி, சிறை தண்டனை 7ஆண்டுகள் வரை உயர்த்தியும், கடும் அபராதமும் விதிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் தகவல்கள் வெளி யிட்டால், ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த சட்ட திருத்தம் விரைவில் அமலுக்கு வரும்.