டில்லி,

பாராளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனையால் நாட்டில் பெருமளவு ஊழல் குறைந்துள்ளதாக கூறினார்.

பாராளுமன்றத்தில் 2018-2019ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது,

நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்துவதால் ஊழல், முறைகேடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏழைகளை மானியம் நேரடியாக சென்று சேர்கிறது என்று கூறினார்.

மேலும், இந்திய பொருளாதாரத்தில் அடிப்படை சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும்,  ஏழ்மையை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் மோடி அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

 

நாட்டின் உற்பத்தி துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகம் எடுத்துள்ளது என்று கூறிய ஜெட்லி,  வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை மோடி அரசு மிகச்சிறப்பான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும், இதன் காரணமாக  நாட்டின் ஏற்றுமதி 15 விழுக்காடு அளவிற்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

 

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறிய அமைச்சர்,  அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.