ஊழல் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கனவே உள்ளது!! அறப்போர் இயக்கம் அம்பலம்

சென்னை:

நடிகர் கமலுக்கு தமிழக அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊழல் குறித்து ஆதாரமில்லாமல் பேசக் கூடாது என்று அமைச்சர் ஒருவர் கமலுக்கு பதில் கூறினார்.

இதைத் தொடர்ந்து தமிழக மக்கள், ரசிகர்கள் ஆங்காங்கு நடக்கும் ஊழல்கள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மெயில் மூலம் புகார் அனுப்புங்கள் என்று கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசு இணையதளத்தில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் மெயில், முகவரிகள் திடீரென மாயமாகியுள்ளது.

அமைச்சர்களில் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் கமல்ஹாசனிடம் போய் ஆதாரம் கொடு ஆதாரம் கொடு என்று வீரத்தை காட்டும் தமிழக அமைச்சர்களே அடுக்கடுக்கான ஆதாரங்களை உங்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளோம்.

நேரம் கொடுத்தால் உங்கள் அனைவரிடமும் தமிழகத்தின் முதலமைச்சரிடமும் கொடுக்க தயாராக உள்ளோம். உங்கள் மீது குற்றமே இல்லை என்றால் நீங்கள் நேர்மையான அரசாக இருந்தால் எங்களிடம் இருக்கும் ஊழல் ஆதாரங்கள் குறித்து உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எங்கள் வரிப்பணத்தை சம்பளமாக கொடுத்து வீணாக்காமல் அந்த துறையை இழுத்து மூடிவிடுங்கள். மக்கள் திரண்டு வந்து அந்த அலுவலகத்தை மூடும் முன்பு நீங்களாக மூடிவிடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளனர். .