டில்லி

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு எடுப்பதில் மோசடி நடந்துள்ளது.

கிழக்கு டில்லி மாநாகராட்சிக்கு சொந்தமாக லட்சுமி நகரில் ஒரு ஹால் ஒன்று உள்ளது.  அது பொதுமக்களின் உபயோகத்துக்காக நகராட்சியினரால் வாடகைக்கு தரப்பட்டு வருகிறது.  இந்த ஹாலில் கல்யாணம், சங்கீத நிகழ்வு போன்றவைகளுக்கு வாடகையாக ரூ.16000 லிருந்து ரூ. 22000 வரை நடைபெறும் நேரத்தைப் பொறுத்து வசூலிக்கப்படுகிறது.  மத நிகழ்வுகள், இறந்தோருக்கான இரங்கல் கூட்டங்கள், மற்றும் நீத்தார் சடங்குகளுக்கு ரூ. 550 மட்டும் வசூலிக்கப் படுகிறது.

திருமணம் நடத்த அழைப்பிதழ் மற்றும் மணமகன் – மணமகள் புகைப்படங்களும் இசை நிகழ்வுகளுக்கு அதற்கான விளம்பரமும் சான்றாக அளிக்கப் படவேண்டும்.  இறந்தோர் நிகழ்வு என்றால் இறப்பு சான்றிதழின் நகல் வழங்க வேண்டும்.  அல்லது இறந்தோரை எரிப்பதற்கு வாங்கப்பட்ட விறகுகளின் பில் அல்லது சுடுகாட்டு சான்றிதழை வழங்க வேண்டும்.

இந்நிலையில் ஒருவர் சாமர்த்தியமாக இருமுறை சாவு நிகழ்வு எனக் கூறி சங்கீத நிகழ்வு நடத்தியது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.  இது நேற்று நடந்த மாநகராட்சி கமிட்டி கூட்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநகராட்சி உறுப்பினர் ரேகா தியாகி, “இது மிகவும் அவமானகரமான நிகழ்ச்சி.  இதை செய்தவரும் துணை போன ஊழல் அதிகாரியும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.  அதே நேரத்தில் இங்குள்ள ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய கச்சேரி நடக்கும் போது அதை ஆராய்ந்து மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கும் எண்ணம் ஏன் வரவில்லை?  ஊழியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லை எனச் சொல்லும் மாநகராட்சி நிர்வாகம் ஏன் இதைக் கவனிக்கவில்லை?” என கேள்வி எழுப்பி உள்ளார்.