அமிர்தசரஸ்:

சுதந்திரத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

ஜாலியன்வாலா பாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி போராட்டம் நடத்திய மக்கள் மீது பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

அங்கிருந்த பார்வையாளர் வருகைப் பதிவேட்டில் எழுதிய அவர், சுதந்திரத்தின் மதிப்பை எப்போதும் மறக்கக்கூடாது. சுதந்திரத்தைப் பெற அனைத்தையும் தியாகம் செய்த இந்தியர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் நடந்த சீக்கியர்களின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்துக்கு இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் டோமினிக் அஸ்கொய்த் வந்து மரியாதை செலுத்தினார்.

அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வெட்கக்கேடானது என அவர் பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.