ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் நடைபெற்ற சமூக விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில்  கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“’குடிநீர் பற்றைக்குறையை முழுமையாகப் போக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இஸ்ரோ கண்டு பிடித்திருக்கிறது. குறைந்த முதலீட்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த இயலும். முதலீட்டில் பாதித் தொகையை அரசும், மீதத் தொகையை தொண்டு நிறுவனங்களும் செய்தால் இத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திவிடலாம்.

முதலீடு செய்ய தொழிலதிபர்கள் பலரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.  கடல் நீரிலிருந்து 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஒரு லிட்டர் குடிநீர் 10 பைசாவுக்கு விற்பனை செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக போக்கிவிட முடியும்.

மீனவர்களுக்குக் கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறியும் தொழில் நுட்பமும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மீனவர்கள் அவர்களுக்கே தெரியாமல் எல்லை தாண்டும் போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவிக்கான தொழில் நுட்பத்தையும் இஸ்ரோ கண்டு பிடித்து இருக்கிறது.

மேலும், கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதை முன்கூடியே செயற்கைக் கோள் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு மீனவர்கள் சென்று கடலில் மீன்பிடிக்கலாம். எல்லை தாண்டும் போது மீனவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை தரக்கூடிய கருவியை தற்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கும் இக்கருவியைத் தயாரித்து வழங்கலாம்” என்று பேசினார்.