கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாரதீய ஜனதாவுக்கு மாறிச்சென்ற கவுன்சிலர்களில் 13 பேர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளனர்.

இதன்மூலம், ஹலிஷாகர் முனிசிபாலிட்டியை திரும்பவும் பிடித்த திரிணாமுல், தற்போது கஞ்ச்ரபாரா முனிசிபாலிடியையும் மீண்டும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு உள்ளாட்சி அமைப்புகளும் பிஜ்பூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன. இதுதான் முன்னாள் திரிணாமுல் தலைவரும், பின்னாளில் பாரதீய ஜனதாவுக்கு சென்றவருமான முகுல் ராயின் சொந்த ஊர்.

கடந்த 2 நாட்களில் 13 கவுன்சிலர்களும் திரிணாமுல் காங்கிரசுக்கே திரும்பியுள்ளனர். புதன்கிழமை 8 கவுன்சிலர்களும், வியாழக்கிழமை 5 கவுன்சிலர்களும் திரும்பியுள்ளனர். மேலும், சில கவுன்சிலர்கள் வந்து இணைவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், ஆளும் கட்சி தனது பலத்தைப் பயன்படுத்தி கவுன்சிலர்களை மிரட்டி மீண்டும் இணைத்துக்கொண்டுள்ளதாகவும், இதற்காக காவல்துறையினர் மற்றும் குண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாரதீய ஜனதா குற்றம் சாட்டுகிறது. மேலும், இது ஜனநாயகத்திற்கும் அராஜகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.