சென்னை,
மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006, 2011, மற்றும்  2016 நவம்பரில் உள்ளாட்சி தேர்தலின்போது, போட்டியிட்ட கவுன்சிலர்கள் தாக்கல் செய்திருந்த சொத்து விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் பெய்த பேய்மழையின் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதற்கு நஷ்டஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சிக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையினால், சென்னை மாந கரமே வெள்ளக்காடானது. பல வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
என்னுடைய வீட்டுக்குள்ளும் 7 அடி தண்ணீர் தேங்கி நின்றது. சென்னை மாநகராட்சியின் ஊழல் முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் தான் சென்னையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. என் வீட்டில் தண்ணீர் புகுந்ததால் என் உடைமை கள் எல்லாம் நாசமானது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கும்படி சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோரை அணுகி கோரிக்கை மனு கொடுத்தேன்.
ஆனால், சென்னை மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லாம் நிவாரணம் வழங்க முடியாது என்று பதில் அளித்தனர்.
justice
இதையடுத்து நான் விசாரணை செய்ததில், மாநகராட்சி வருவாய் ஆதாரங்களே, மாநகராட்சியின் கவுன்சிலர்க ளின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது என்று தெரிய வந்தது.
உதாரணத்துக்கு சென்னை மாநகராட்சியின் 196-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அண்ணாமலை. இவர் தனக்கு உள்ள ஏராளமான சொத்துக்களுக்கு குறைவான சொத்து வரியை நிர்ணயம் செய்ய அதிகாரிகளை நிர்பந்தித்துள்ளார்.
இதனால் சொற்ப தொகையை சொத்து வரியாக அவர் செலுத்தியுள்ளார்.
ஈஞ்சம்பாக்கம் தேவி நகரில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு சொத்து வரியாக ரூ.55, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள வீட்டிற்கு ரூ.110, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 3 வீடுகளுக்கு தலா ரூ.55, ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளுக்கு தலா ரூ.1,940, திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டிற்கு ரூ.110, சோழிங்கர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீட்டிற்கு ரூ.3,650 என்று சொத்து வரி செலுத்தியுள்ளார்.
இந்த சொத்துகளுக்கு எல்லாம் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து குறைவான வரியை நிர்ணயம் செய்ய வைத்துள்ளார். மாநகராட்சியின் வருவாய் ஆதாரத்துக்கு அறங்காவலர்களாக இருக்கும் கவுன்சிலர்களே இப்படி வரியை குறைத்து செலுத்தினால், எப்படி மாநகராட்சிக்கு வருவாய் வரும்?
எனவே, கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரிகள் அனைத்தையும் ரத்து செய்து, மீண்டும் ஆய்வு செய்து, சட்டப்படி தகுந்த வரியை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த அக்டோபர் 4 மற்றும் 6-ந்தேதிகளில் கோரிக்கை மனு கொடுத்தேன். ஆனால், ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கவுன்சிலரின் சொத்துக்களுக்கு விதிக்கப் பட்ட வரியை ரத்து செய்து மீண்டும் வரியை நிர்ண யிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை வரி நிர்ணய புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், கவுன்சிலர் அண்ணா மலையின் 12 வீடுகளின் புகைப்படத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதி அதிர்ச்சி யடைந்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வீடுகள் எல்லாம் அரண்மனை போல உள்ளது. ஆனால், அந்த வீட்டிற்கு சொத்து வரி வெறும் ரூ.55, ரூ.110 என்று நிர்ணயம் செய்வதா?  கவுன்சிலர்கள் எல்லோரும் எவ்வளவு தீவிரமாக பொது சேவையை செய்துள்ளனர் என்பதை இந்த வீட்டை பார்த்தாலே தெரிகிறது.
எனவே, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி தேர்தலில், வெற்றிப் பெற்ற கவுன்சிலர்கள், தங்களது வேட்புமனுவுடன் தங்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருப்பார்கள். அந்த சொத்து விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், போட்டியிட பழைய கவுன்சிலர்கள் மீண்டும் வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பார்கள். அதில் உள்ள சொத்து விவரங்களையும், மாநில தேர்தல் ஆணையம் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல்,  மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ள கவுன்சிலர் அண்ணாமலை, 2006-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, இவரது சொத்து விவரங்களையும் தனியாக தாக்கல் செய்யவேண்டும் என்றார்.
வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைப்பதாகவும் கூறினார்.