சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்  இன்று தொடங்கியது.

இன்று, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் என, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. நாளை முதல்  பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவ  படிப்புகளில், 2020 – 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,  13 ஆயிரத்து, 901 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களான கவுன்சிலிங் இன்று தொடங்கி உள்ளது.

முதல்கட்டமாக  இன்று, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் என, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேரடியாக  நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை முதல்   www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், 24ம் தேதி காலை, 10:00 முதல், 28ம் தேதி மாலை, 6:00 மணி வரை பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை, 30ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து,  இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான பதிவு, ஜனவரி 19ந்தேதி தொடங்கும் என்றும், ஆணை பெற்றவர்கள்,  ஜனவரி, 13 மாலை, 5:00 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீராபாண்டி, உடுமைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் மூன்று கல்லூரிகள் செயல்பட தொடங்குகின்றன. அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.