புதுடெல்லி: நடப்பு 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களால், தயாரிப்பு குறைபாடுகளுக்காக 2.12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான வாகனங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம். புதிய மோட்டார் வாகன சட்டத்தால் இதுதொடர்பாக நுட்பமான தகவல்கள் கிடைத்துள்ளதாய் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு முழுவதும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில், மொத்தமாக 85% அளவிற்கு இந்த 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களிலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட்டர்கள், சேடன்ஸ், ஹேட்ச்பேக்ஸ் மற்றும் சொகுசு கார்கள் உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தயாரிப்பு குறைபாடுகளாக பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காற்றுப் பைகள் சரியான நேரத்தில் விரியாமை அல்லது சரியாக செயல்படாமை, குளிர்சாதன வசதி சரியாக செயல்படாமை, தவறான உபகரண கிளஸ்டர் ரீடிங், வழக்கத்துக்கு மீறிய வைப்ரேஷன்கள், பேட்டரி, சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் வயரிங் விஷயங்களில் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்கள் அவற்றுள் அடக்கம்.