டெல்லி சட்டசபை வாக்குப்பதிவில் குழப்பம்: ஒட்டுமொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள் இடையே வேறுபாடு

டெல்லி: டெல்லியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையும், தேர்தலில் பதிவான வாக்குகளும் சம எண்ணிக்கையில் இல்லாத விஷயம் வெளியில் வந்திருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. 62 தொகுதிகளை அக்கட்சி வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. அனைத்து தொகுதிகளிலும் தோற்றது காங்கிரஸ்.

இந் நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள், அதில் எண்ணப்பட்ட வாக்குகள் பற்றி முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வேறுபாடுகள் இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 26 முதல் 38 தொகுதிகளில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையேயான வாக்கு வித்தியாசம் 100க்கும் குறைவு. 100 வாக்குகள் முதல் 1000 வாக்குகள் வித்தியாசம் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 12.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 50 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் என்பது 100 வாக்குகள் முதல் 1000 வரை தான். இது தவிர, அதாவது ஒட்டுமொத்தமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 92.5 லட்சம். அதாவது 62.5 சதவீதம் ஆகும்.

இப்போது இந்த ஒட்டுமொத்த வாக்களித்தவர்கள், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் காணப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு தொகுதியிலும் இந்த வித்தியாசம் அதிகமாகவே காணப்படுகிறது.

கரோல் பாக் தொகுதியில் பதிவானது 107184 வாக்குகள். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் காணப்பட்ட வாக்குகள் 108339. அதாவது 1155 வாக்குகள் வித்தியாசம் வருகிறது. இதே போன்று தான் புராரி, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளிலும் முறையே 464, 396 வாக்குகள் வித்தியாசம் காணப்படுகிறது.

சங்கம் விகாரில் 117463 வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகி எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 116599 ஆகும். வித்தியாசம் 864 வாக்குகள். இதுவே ரோகத் நகர்  தொகுதியில் 844 ஆகும்.

இது குறித்து பேசிய டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்,  இதுபோன்ற முரண்பாடுகள் அசாதாரணமானது இல்லை. சில நேரங்களில் போலி வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கும் போது இவ்வாறு ஏற்படும்.

தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் எந்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டு, மீதமுள்ள எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட எந்திரத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை முடிவை பாதிக்காது என்றால், நாங்கள் அந்த வாக்குகளை எண்ண மாட்டோம் என்றார்.