கேரளாவின் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம் உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 21ம் தேதி, கடும் மழைக்கு நடுவே திரளான அளவில் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். மஞ்சேஸ்வரம் தொகுதியில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றிருந்தது. அதனால் இத்தேர்தலில் அத்தொகுதியை வென்றாகவேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

அதேநேரம், கேரளாவில் சரிந்த தங்களில் செல்வாக்கை மீட்டெடுக்க இடதுசாரிகள் கூட்டணியும், நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்திட காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் 5 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மாலைக்குள் வெற்றி விபரங்கள் தெரியவரும் என்பதால், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.