பாகிஸ்தான் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

பாகிஸ்தானில் இன்று காலை பொதுத் தேர்தல் தொடங்கி மாலை முடிவடைந்தது.   புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடெங்கும் உள்ள 85 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.   இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி உள்ளது.

நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், மறைந்த பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாஃப் ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உள்ள மொத்தத் தொகுதிகளான 342 தொகுதிகளில் இன்றைய தேர்தல் மூலம் 272 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.   இந்த வாக்குப்பதிவு பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

தற்போது இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் முழுமையாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.