ஸ்லாமாபாத்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடைபெறும் எனப் பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் எங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.   மாநிலம் முழுவதும் இணையம் மற்றும் தொலைப்பேசி சேவை முடக்கப்பட்டது.

இதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  ஐநா பாதுகாப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புக்களிடம் காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகளை மீறுவதாகப் புகார் அளித்துள்ளது.   துருக்கி, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர மீதமுள்ள நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.  ஆயினும் பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் காஷ்மீர் விவகார அமைச்சர் அலி அமீன் கந்தாபூர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் அமைதியாக இருக்கின்றன.  ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் விவகாரத்தினால் போர் மூள நேரிடலாம் என்னும் அபாயம் உள்ளது.

காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல் நடவடிக்கை தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குப் போர் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை உண்டாகும்.  அப்போது இந்தியா மட்டுமின்றி இந்தியாவுக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு அளிக்கும் நாடுகளும் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அதைப் பாகிஸ்தான் தனது எதிரி எனக் கருதும்.  அந்நாட்டின் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும்” என மிரட்டல் விடுத்துள்ளார்.  இது உலகெங்கும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பலரும் அமைச்சர் பொறுப்பில்லாமல் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.