ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது நாட்டுக்கே பேரதிர்ச்சி: நடிகை கவுதமி கருத்து

விருதுநகர்: ரஜினி தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது  நாட்டுக்கே பேரதிர்ச்சியாக உள்ளது என்று நடிகையும், பாஜக பிரமுகருமான கவுதமி தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நடிகர் ரஜினிகாந்த் தமது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதையடுத்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்றோடு முற்றுப் பெற்றது.

அவரது முடிவு குறித்து இருவேறு கருத்துகளை அரசியல்தளங்களில் பல்வேறு தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந் நிலையில், நடிகையும், பாஜக பிரமுகருமான கவுதமி, ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டது, நாட்டுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்று கூறி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்தல் பொறுப்பாளரான அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடைசி நேரத்தில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை  எடுத்திருப்பார். அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

ரஜினியை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற திட்டம் கைவிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது குறித்து செய்தியாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த கவுதமி, கட்சி ஆரம்பிக்காத ஒருவரை வைத்து இதுபோன்று பேசுவது அர்த்தம் இல்லாத பேச்சு என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: நியாயமான கட்சி, யார் நல்லது செய்துள்ளார்கள் என்பதை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் பணிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றார்.