கொல்கத்தா:

குஜராத் மாநிலத்தில் படேல் சமூக இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். பின்னர் உள்ளூர் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வந்துவிட்டால், நாடு குடியரசு தலைவர் ஆட்சியை எதிர்நோக்க வேண்டிய நிலை வரும்.

நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு குறித்து பேசுகின்ற ஒரு பிரதமரை நான் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் 90 நிமிடங்கள் எதிர்கட்சிகள் மீது குறை கூறும் பிரதமரை பார்க்க நான் விரும்பவில்லை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ மம்தாவிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவரது எளிமையை கண்டு பிரமித்துள்ளேன். மக்களிடம் எப்படி பேச வேண்டும் என்று அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். எதிர்கட்சிகளை வழிநடத்த மம்தா தலைமை ஏற்க வேண்டும்.

என்னை அவர் இளைய சகோதரராக கருதுகிறார். 2019 லோக்சபா தேர்தலில் இங்கு பிரச்சாரம் மேற்கொள்வேன். இந்திராகாந்திக்கு பிறகு மக்கள் நலனுக்காக போராட கூடிய ஒரு பெண் சோனியா காந்தி தான். எளிமையானவர். சுயநலம் அற்றவர்’’ என்றார்.

மம்தாவுடனால சந்திப்பின்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு ஹர்திக் படேலு க்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார். குஜராத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகித்து வழிநடத்தி செல்லுமாறு மம்தா கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.