கள்ளத்தொடர்பு..  தம்பதி சண்டை.. சென்னையில் தரையிறங்கிய விமானம்!

சென்னை:

விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த நேரத்தில் கணவனின் கள்ளத்தொடர்புகள் குறித்து தெரிய வரவே மனைவி ரகளை செய்ய… விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

நேற்று கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று தோஹாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக பயணித்தனர்.

கணவன் தூங்கியதும் சாதாரணமாக அவரது போனை எடுத்து பார்த்து இருக்கிறார் மனைவி. அதில் பல பெண்களுடன் கணவர் போஸ் கொடுத்த படங்கள் இருந்திருக்கின்றன. நீண்டகாலமாக கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆத்திரமான அந்தப் பெண்மணி,  உடனடியாக கணவனை எழுப்பி அவருடன் சண்டையிட்டார்.  பதிலுக்கு கணவரும் சத்தம்போட.. ரகளையானது.

இவர்களது ரகளையால்  விமானத்தில் பயணித்த அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். தவிர அந்த பெண் குடி போதையில் வேறு அப்போது இருந்து இருக்கிறார்.

இவர்களது  சண்டையை தடுக்க வந்த விமான பணியாளர்களையும் அந்த பெண்மணி  திட்டி இருக்கிறார். இதனால் அங்கு பெரிய குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் விமானத்தை உடனே தரை இறக்கவும் கூறி இருக்கிறார். அவர் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறார் என்பதால் விமானத்தை தரை இறக்கும் முடிவை விமானிகள் எடுத்தனர்.

இதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது கணவரும் தரையிறக்கப்பட்டார். அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதியபபடவில்லை. தவிர அவர்களின் பெயரை வெளியிட விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.