தாய்லாந்து சென்றுவந்ததை மறைத்த மகாராஷ்டிரா தம்பதி மீது வழக்கு!

மும்பை:

தாய்லாந்து சென்றுவந்ததை மறைத்த மகாராஷ்டிரா தம்பதி மீது மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் தங்களது வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவிக்க மறுத்ததற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகாராஷ்டிரா மாநிலம். இங்கு வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 49 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தம்பதியினர் அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் தங்களது பயணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க தவறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் பரவல், பெரும்பாலும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலமே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சமீப மாதங்களில் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அதுகுறித்து தகவலை தெரிவிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த தம்பதியினர்  தங்களது தாய்லாந்து பயணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க தவறியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.