லாஸ் வேகாஸ்

லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வில் தப்பித்த தம்பதியர் கார் விபத்தில் மரணம் அடைந்தனர்.

லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வரும் தம்பதியர் டென்னிஸ் மற்றும் லொரைன் கார்வர்.   இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது.   இருவரும் இந்த மாத ஆரம்பத்தில் நடந்த லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.   அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் இறந்தனர்.   அந்த சமயத்தில் தன் மனைவி மேல் குண்டு படாதபடி முழுவதுமாக அவரை மறைத்தார் கணவரான டென்னிஸ் கார்வர்.

அந்த நிகழ்வில் இருவரும் எந்த குண்டு காயமும் ஏற்படாமல் தப்பித்தது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த தம்பதியர் தாங்கள் வசித்து வந்த ரிவர்சைட் குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல வாகனத்தில் சென்றுள்ளனர்.  திடீரென அந்த குடியிருப்பின் வாசலில் இருந்த இரும்புக் கதவில் கார் வேகமாக மோதி உள்ளது.   சப்தம் கேட்டு ஓடி வந்த அவர்கள் இளைய மகள் மடிசன் கார்வர் (வயது 16) கார் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ந்தார்.   இருவரும் காரிலேயே தீக்குள் சிக்கி மரணம் அடைந்துள்ளனர்.

இந்த மரணத்துக்கு அவர்கள் உறவினர் மட்டும் இன்றி லாஸ் வேகாஸ் மக்களும், தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.    இந்த தம்பதியினரின் மூத்த மகள் புரூக் கார்வர் கூறுகையில், “எனது பெற்றோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த பின் ஒரு ரோஜாக் கொத்தை வாங்கி வந்தனர்.   ஒரு மாதமாகியும் அந்த ரோஜாக் கொத்தில் இருந்து ஒரு இதழும் உதிரவில்லை.   வாடிப் போய் உள்ளது.   ஆனால் இதழ்கள் அப்படியே உள்ளது.   என் பெற்றோர் மரணம் அடைந்தாலும் இந்த ரோஜாக் கொத்து அவர்கள் நினைவுடன் எங்களுடன் உள்ளது” என கண்ணீருடன் தெரிவித்தார்.