ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்..

ஜோதிடர் மிரட்டலால் எல்லையில் திருமணம்..

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஜோலுக்கும், மே.வங்காள மாநில இளைஞர் ஓம் பிரகாசுக்கும் 6 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அசாம் மாநிலம் துப்ரியில் உள்ள கஜோல் வீட்டில் கல்யாணம் நடப்பதாக ஏற்பாடு.

அவர்கள் திருமணத்தைக் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடத்த விடாமல் விளையாடியது, கொரோனா.

அண்மையில் மே.வங்காளத்தில் இருந்து அசாம் வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அந்த மாநிலத்தில் இருந்து ஆட்கள் நுழைய அசாம் தடை போட்டது.

எனவே, திருமணத்தைத் தள்ளி வைக்கலாம் என இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிக்க, ‘’ இந்த கல்யாணம் இப்போது நடக்காவிட்டால் எப்போதுமே நடக்காது’’ என அவர்கள் குடும்ப ஜோதிடர் எச்சரித்தார்.

அதன் பின், பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி, அசாம்- மே.வங்காள எல்லையான சகோலியா சோதனை சாவடியில்  திருமணத்தை நடத்துவது என்று முடிவானது.

கஜோல் தனது வீட்டில் இருந்து 55 கி.மீ. தூரமும்,ஓம் பிரகாஷ், தங்கள் ஊரில் இருந்து 175 கி.மீ. தூரமும் பயணித்து எல்லைக்கோட்டுக்கு வந்தனர்.

சொற்ப உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிகழ்ந்தேறியது.

பின்னர் மணமக்கள், மே.வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்,

14 நாள் அங்கே தங்கி இருந்து விட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்