விஜயவாடா

விவாகரத்து செய்துக் கொண்ட கணவன் மனைவி நீதிமன்றத்தில் மீண்டும் மணம் புரிந்துக் கொண்டனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளவர் சுப்ரமணியம்.   இவர் குண்டுரை சேர்ந்த ஸ்ராவணி என்னும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.   இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும்பிறந்தனர்.    சில கால குடும்ப வாழ்க்கைக்குப் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.   இதனால் விஜயவாடாவில் உள்ள குடும்ப நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தனர்.     2011 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீதிமன்றம் இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு விவாகரத்து அளித்துள்ளது.

பிரிந்து வாழ்ந்த இருவரிடையே மனமாற்றம் ஏற்பட்டது.   மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.    பிறகு விஜயவாடாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரான விஜயலட்சுமியை சந்தித்து தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.   விஜய லட்சுமி இவர்கள் சார்பாக விஜயவாடா குடும்ப நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில்,  “இருவரும் பிரிந்திருந்த போது அவரவர் செய்த தவறுகளைப் புரிந்துக் கொண்டு அவற்றை திருத்திக் கொண்டுள்ளனர்.  தற்போது இவர்களால் பிரிந்து வாழ விருப்பம் இல்லாததாலும்,  பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிட்டும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர்.   எனவே இவர்களின் விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்” என விஜயலட்சுமி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு விஜயவாடா குடும்ப நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.  இருவரையும் விசாரித்த போது சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.   அதைத் தொடர்ந்து விவாகரத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.   சுப்ரமணியமும் ஸ்ராவணியும் நீதிமன்றத்திலேயே மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர்.