கோர்ட்டு அதிரடி: 50 அரசு பேருந்துகள் ஜப்தி! பொதுமக்கள் அவதி

நாகர்கோவில்,

கோர்ட்டு உத்தரவு காரணமாக 50 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு பஸ் இல்லாமல் அவதி பட்டனர்.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் அரசு பஸ்களை ஜப்தி செய்ய  இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் அரசு பேருந்துகளுக்கு டயர் செய்ய ரப்பர் மோல்ட் வாங்கப்பட்டது.

கேரள மாநிலத்தை சேர்ந்த ரைமான்ஸ் ரப்பர் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து ரப்பர் மோல்ட் கொள்முதல் செய்ததில் ரூ.2 கோடியே 42 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த தொகையை வழங்கக் கோரி தனியார் நிறுவனத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, பணத்தை போக்குவரத்துக் கழகம் உடனடியாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி சசிகுமார் கடந்த மாதம் 18ந்தேதி உத்தரவிட்டார்.

ஆனால், பணம் செலுத்தப்படாதாதால் அந்நிறுவனத்தினர் மீண்டும் நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் மீது மனு தாக்கல் செய்தனர்.

மீண்டும்  வழக்கை விசாரித்த நீதிபதி சதிகுமார் திருநெல்வேலி கோட்டத்திற்கு  உள்பட்ட  50 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய அதிரடி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதி மன்ற ஊழியர்கள் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த எட்டு பேருந்துகளை ஜப்தி செய்வதாக நோட்டீஸ்கள் ஒட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் பல பேருந்துகளை ஜப்தி செய்து வருகின்றனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகளும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதனால் வடசேரி பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுக்கும் அதிகாரி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.