சென்னை:

மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையில்  25 ஆண்டுளாக ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாடகையாக மாதம் 3ஆயிரத்து 702 ரூபாயை இந்நிறுவனம் செலுத்தி வந்தது.  வாடகையை 21 ஆயிரத்து 160 ரூபாயாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதில், மாநகராட்சி அளித்த பதிலில், ‘‘3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மாற்றியமைக்கப்படும். இதுவரை முறையாக செலுத்தி வந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்க்கிறார். உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லை என்றால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி அளித்த தீர்ப்பில் ‘‘பல ஆண்டுகளாக அங்கு தொழில் செய்து புதிய வாடகையை ஏற்பதா? இல்லையா? என்பதை லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம். கடை தேவைப்படுகிறது என்றால் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.

தவறினால் கடையை மாநகராட்சி ஏலம் விடலாம். ஏல அறிவிப்பை வெளியிட்ட பின்னரும் கடையை காலி செய்யவில்லை    என்றால் போலீசாரின் உதவியுடன் கடையை சென்னை மாநகராட்சி காலி செய்யலாம்’’ என்றார்.