பறிமுதல் செய்யப்பட்ட விஜய்மல்லையாவின் சொத்துக்களை பயன்படுத்தலாம்! நீதிமன்றம் அனுமதி

மும்பை: நிதி மோசடியில் சிக்கி தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்துவரும் விஜய் மால்யாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

விஜய் மால்யா பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது முதல், அவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, மால்யாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள், வட்டியுடன் சேர்த்து, அவருக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி கடனை, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மூலம் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கக் கோரி மும்பை நீதிமன்றத்தை அணுகின.

மேலும், வங்கிகளின் கோரிக்கை தொடர்பாக தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அமலாக்கத் துறையும் அறிவித்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தவிட்டுள்ளது.

அதேசமயம், பாதிக்கப்பட்ட தரப்பினர், இந்த உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, வரும் 18ம் தேதி வரை தனது தீர்ப்பிற்கு தடைவிதித்துள்ளது மும்பை நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.