ராகேஷ் அஸ்தானா லஞ்ச வழக்கு: உண்மை அறியும் சோதனை நடத்தாதது ஏன்? சிபிஐ கேள்வி

டெல்லி: சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் ஏன் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவில்லை என்று சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா பதவி வகித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, சா்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளா் மொயின் குரேஷி தொடா்புடைய வழக்கிலிருந்து, ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரை விடுவிக்க லஞ்சம் வாங்கினார் என்பதாகும்.

இதையடுத்து, அஸ்தானா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் டிஎஸ்பி தேவேந்தா் குமார், இடைத்தரகா் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தொழிலதிபர்கள் மனோஜ் பிரசாத், தேவேந்தா் குமார் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, சிபிஐ அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், அஸ்தானா, தேவேந்தா் குமார் இருவரும் லஞ்சம் வாங்கினர் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,ராகேஷ் அஸ்தானாவுக்கு உண்மை கண்டறியும் சோதனையும், உளவியல் ரீதியிலான சோதனையும் நடத்தப்படாதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வழக்கின் முழு விவரங்களுடன், விசாரணை அதிகாரி வரும் 28ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.