ப சிதம்பரத்துக்கு வளரும் சிக்கல் : சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு

டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு மேலும் ஒரு நாள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராகப் பணி புரிந்து வந்தார். அந்த கால கட்டத்தில் 2007 ஆம் ஆண்டு ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு நேரடி  அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.305 கோடி அன்னிய முதலீட்டைப் பெற்றது. இதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அன்னிய முதலீட்டுக்கு விதிகளை மீறி ப சிதம்பரம்  அனுமதி அளித்ததாகக் கூறப்பட்டது. அத்துடன் இதற்காக ப சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்குப் பணம் அளிக்கப்பட்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐயும் மற்றும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது. கடந்த 21 ஆம் தேதி ப சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவின் விசாரணையை நீதிமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தள்ளி வைத்தது. மேலும் அதுவரை சிபிஐ காவலை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் படி சிதம்பரத்தை வரும் 5 ஆம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி