உத்தரபிரதேசம்: கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 19 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 1999ம் ஆண்டில் நடந்த பேரணியில் ஏற்பட்ட மோதலில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் தலத் அஜிசின் தனி பாதுகாப்பு அதிகாரி, சத்ய பிரகாஷ் யாதவ் கொல்லப்பட்டார்.

இது குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க லக்னோ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹாராஜ்கஞ்ச் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறது. இதை தொடர்ந்து முதல்வர் ஆதித்யநாத் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.