’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை..
டிவிட்டர் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் ஏடாகூடமாகக் கருத்து தெரிவித்து சர்ச்சை நாயகி எனப் பெயரெடுத்துள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத், மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், கங்கனா தனது ட்விட்டரில் , இந்த போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி கருத்து வெளியிட்டார்.
‘’ மத்திய அரசு , குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த போது சிலர் அது குறித்து வதந்தி பரப்பி பெரும் கலகத்துக்கு வழி வகுத்தனர். அதே ஆட்கள் இப்போது, வேளாண் சட்டத்தை எதிர்த்து வதந்தி  கிளப்பியுள்ளனர்.. அவர்களைத் தீவிரவாதிகள் என்றே சொல்ல வேண்டும்’ என கங்கனா தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலம் கியாத்சந்திரா பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர், கங்கனா கருத்துக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளார்.விவசாயிகளைப் புண் படுத்தியுள்ள கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  துமாகுரு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ரமேஷ், வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய கியாத்சந்திரா காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
-பா.பாரதி.