கொச்சி

திருமண தகவல் மையம் மூலம் மணமகள் கிடைக்காததால் ஒரு வாலிபர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

‘’எங்கள் பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள்.. பலன் அளிக்கா விட்டால் பணம் திருப்பி தரப்படும்’’ என அநேக  நிறுவனங்கள் விளம்பரம் செய்வதை அறிவோம்.

இந்த விளம்பரமே ஒரு நிறுவனத்துக்கு வினையாகிப்போன கதை இப்போது:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, கேரள மாநிலத்தில் ‘ திருமண தகவல் மையம்’ ஒன்று செயல்பட்டு வருகிறது.

பல ரேஞ்சுகளில் மணமக்களை, தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளது, இந்த மையம்.

‘’உயர் பிரீமியம் பேக்கேஜ்’ என்பது அதில் ஒரு ரேஞ்ச்.

இந்த பேக்கேஜுக்கு கட்டணம் ஒரு லட்சம் ரூபாய்.

பணக்காரர்கள், பெரும் தொழில் அதிபர்கள், நிறையச் சம்பளம் வாங்கும் மணமக்கள், இந்த ’உயர் பிரீமியம்’ பேக்கேஜ் சிஸ்டத்தில் கிடைப்பார்கள்.

‘’ எங்களிடம் சந்தா கட்டியவர்களுக்கு ஒரு வருடத்தில் பொருத்தமான வரன் அமையா விட்டால் ,பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவோம்’’ என அந்த மையம் போகிற போக்கில் விளம்பரம் செய்து வைக்க-

அதுவே வினையாகிப்போனது.

கொச்சியைச் சேர்ந்த ஜான் என்பவர், ஒரு லட்சம் ரூபாய் சந்தா கட்டி இந்த திருமண மையத்தில் பதிவு செய்துள்ளார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அவருக்கு 23 பெண்களின் ஜாதகம் வந்துள்ளது.ஒரு பெண்ணை மட்டுமே ஜானுக்கு பிடித்தது.

அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பினார். அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

எரிச்சலான ஜான், பணத்தைத் திருப்பி கொடுங்க என அந்த மையத்துக்குக் கடிதம் மேல் கடிதம் அனுப்ப-

எந்த பதிலும் இல்லை.

வேறு வழி இன்றி, தனக்கு நஷ்ட ஈடு கேட்டு சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் , அந்த திருமண தகவல் மையம் , ஜானிடம் வாங்கிய சந்தா பணம் ஒரு லட்சத்தை 6%  வட்டியுடன் திருப்பி கொடுக்க ஆணையிட்டது.

மேலும், வழக்கு செலவுக்காக ஜானுக்கு 22 ஆயிரம் ரூபாயைத் தரவும் உத்தரவிட்டது.

– ஏழுமலை வெங்கடேசன்-