சென்னை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றப் பணிகளும் வரும் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கமிட்டி கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும், தற்போது என்ன நிலை உள்ளதோ அதுவே நீட்டிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

முக்கிய வழக்குகளை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதிகள், அவர்கள் இல்லத்தில் இருந்தபடியே விசாரிப்பார்கள் எனவும், அனைத்து வழக்குகளையும் ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடியும் வரை நீதிமன்ற வளாகங்களில் பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசின் சார்பில் ‍அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.