ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்

தராபாத்

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்யும் முயற்சி ஐதராபாத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன.  அவ்வகையில் இந்திய நிறுவனமான பரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசி யை கண்டு பிடித்துள்ளது.  அந்த மருந்தை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து பரிசோதனை செய்யத் திட்டமிட்டது.

இந்த மருந்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பொது விற்பனைக்கு வரும் என ஐ சி எம் ஆர் அறிவித்திருந்தது.  ஆனால் அவ்வளவு விரைவாகப் பரிசோதனை செய்யக்கூடாது என மருத்துவ ஆர்வலர்கள் அறிவுரை அளித்தனர்.   தற்போது இந்த தேதி அக்டோபர் 15க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐ சி எம் ஆர் நாட்டில் உள்ள 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்து மனிதர்களுக்கு அளித்து பரிசோதனை நடக்கும் என தெரிவித்தது,   இதில் ஐதராபாத் நகரில் உள்ள  என் ஐ எம் எஸ் மருத்துவமனையும் ஒன்றாகும்.  இந்த மருத்துவமனை இயக்குநர் நல்ல உடல்நலம் கொண்டவர்களைத் தேர்வு செய்து அவர்களுடைய இரத்த மாதிரிகளை டில்லிக்கு அனுப்பி சோதனைக்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு நேற்று முதல் கட்ட சோதனை தொடங்கப்பட்டுள்ளது

இயக்குநர் மனோகர், “நாங்கள் டில்லி ஐ சி எம் ஆர் தலைமையகத்துக்கு அளித்த ரத்த மாதிரிகளைச் சோதனை செய்து ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த சோதனைக்கு உட்படுவோரிடம் முழு சம்மதம் பெற்ற பிறகே சோதனை தொடங்கப்பட்டுள்ளது.   இந்த சோதனையில் சுமார் 30 பேர் இடம் பெறுவார்கள்”என தெரிவித்துள்ளார்.