இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் தடுப்பூசி வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு

 

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்ஸின் எனும் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் அந்நாட்டு மத்திய தணிக்கை நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 2,50,000 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்நாட்டு அரசு, பிப்ரவரி 25 ம் தேதி, பாரத் பையோடெக் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2 கோடி டோஸ் மருந்தை சுமார் ரூ. 2000 கோடிக்கு வாங்குவதற்கு கையெழுத்திட்டது. இதனை தொடர்ந்து, அவசர தேவைக்காக முதல் கட்டமாக, 80 லட்சம் டோஸ் மருந்தை மார்ச் முதல் வாரத்தில் அனுப்பி வைக்க கோரியிருந்தது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் முறையாக போடப்படவில்லை, ஒப்பந்த புள்ளி கோரப்படாமல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்நிறுவனத்தின் இந்த மருந்து சோதனை இன்னும் முடியவில்லை, மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாக வில்லை என்றும் கூறி, அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் பிப்ரவரி 26 ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலேயே சில மாநிலங்களில் இந்த மருந்துக்கு தடை விதித்திருக்கின்றனர் அதனால் இந்த மருந்து குறித்த சந்தேகங்கள் தீரும் வரை இதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், பிரேசில் நாட்டு தேசிய சுகாதார கண்காணிப்பு முகமை, மார்ச் 1 முதல் 5 வரை இந்தியாவில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.