சென்னை: பரிசோதனைகள் முழுமை அடையாத கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என விசிக எம்பி ரவிக்குமார் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், மத்தியஅரசு அவசலகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
இந்த நிலையில்,  பரிசோதனைகள் முழுமை அடையாத கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும். சுதேசி தடுப்பூசி என சொல்லப்படும் கோவேக்ஸின் குறித்து மருத்துவ வல்லுநர்கள் எழுப்பும் ஐயம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.