டில்லி

கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் தங்கள் மருந்து பாதுகாப்பான பக்க விளைவற்றது என தெரிவித்துள்ளது.

நேற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதி அளித்துள்ளது.   கோவாக்சின் மருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.  கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனத்தால் கண்டறியப்பட்டு இந்திய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் உருவாக்கப்படுகிறது.

இதில் கோவிஷீல்ட் மருந்து மூன்று கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளது.  உலக அளவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இம்மருந்து 70.42% திறமை உள்ளதாக சோதனைகள் தெரிவித்துள்ளன.  ஆனால் கோவாக்சின் மருந்து திறன் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததால் பலரும் அந்த மருந்து மீது சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  இந்நிலையில் பாரத பயோடெக் நிறுவன அதிகாரி கிருஷ்ணா எலா கோவாக்சின் குறித்து விளக்கம்  அளித்துள்ளார்.

கிருஷ்ணா எலா, “நாங்கள் இந்த மருந்தைச் சரியான முறையில் 200% நியாயமான சோதனைகள் செய்துள்ளோம்.  இந்த மருந்து மற்ற மருந்துகளை விட அதிக திறன் கொண்டதாகும்.  எனவே மருந்து தயாரிப்பு , திறன், பக்கவிளைவு ஆகியவை குறித்து எவ்வித குற்றச்சாட்டும் எங்கள் மீது வைக்க வேண்டாம்.  எங்களுடையது சர்வதேச நிறுவனம்.  எங்களுக்குத் தடுப்பூசி தயாரிப்பில் ஏராளமான அனுபவம் உள்ளது.

நாங்கள் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் சோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளோம்.   எங்கள் மருந்து தண்ணீரைப் போன்றது.  எவ்வித பக்கவிளைவும் இல்லாதது.  எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே பிஎஸ்எல் 3 சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே சிகா வைரஸ் மற்றும் சிக்கன் குனியா வைரஸ் ஆகியவற்றை நாங்கள் முதலில் கண்டுபிடித்துள்ளோம்.   எனவே எங்களிடம் அனைத்துக்கும் சோதனை அறிக்கைகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.