வங்கதேசத்தில் ஏப். 14 முதல் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை..!

டாக்கா: வங்கதேசத்தில் வரும் 14ம் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 20ம் தேதி வரை வங்கதேசம் செல்லும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தடை காரணமாக 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சிஏஏபியின் துணை மார்ஷல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவ தேவைகள், நிவாரணம் மற்றும் சரக்கு விமானங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று விமான ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் 12 நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.