கோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.  மாநகர நிர்வாகத்தின் பதிவுகளின்படி, சென்னையில் ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் நூறு பேர்களில் தொற்று உறுதியாகும் நோயாளிகளின் விகிதம் மூன்று வாரங்களுக்கு முன்பு 35% ஆக இருந்து, ஜூலை 4 அன்று 16.52% ஆக குறைந்துள்ளது.

ஜூன் மாத மத்தியில் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்பட்ட 5,000 முதல் 5,500 பேரில், சுமார் 1,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். அதே சனிக்கிழமை நகரத்தில் பரிசோதிக்கப்பட்ட 11,144 பேரில், 1,842 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. இது 16.52% ஆகும். ஜூன் 19 முதல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறையக் காரணம் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் அதிக அறிகுறி கொண்டவர்களையும் கண்டறிய முடிந்ததாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருந்ததால், சோதனைகளை விரைவுப்படுத்தவும், அறிகுறி கொண்டவர்களை அடையாளம் காணவும் இந்த முழு அடைப்பு உதவியது, என்றார். “தெரு அளவில் நடத்தப்பட்ட முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், ஸ்க்ரீனிங் மையங்கள் போன்றவை தடையற்ற நோயாளிகள் மேலாண்மையை வலுப்படுத்தியது. மேலும், தனிமைப்படுத்துதல் முகாம்களும் பெருமளவில் உதவியதாக தெரிவித்தார். இந்த முயற்சிக்கு சுமார் 42,000 மாநகராட்சி பணியாளர்கள் உதவியாக இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 முதல், நகரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 500 காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் பரிசோதிக்கப்பட்டனர். இது அறிகுறி கொண்டவர்களைஅடையாளம் காணவும், அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும் முடிந்தது என அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. இதற்கு முன்னதாக, சோதனை முடிவுகள் வர இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகிக் கொண்டிருந்தது.

ஆனால் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ஒரே நேரத்தில் காய்ச்சல் முகாம்களையும், பரிசோதனை  மாதிரி சேகரிப்பையும் நடத்தினோம். காய்ச்சல் முகாம்களில் இந்த நபர்களை நாங்கள் பரிசோதித்திருக்காவிட்டால், தொற்று மேலும் பரவியிருக்கும் ”என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார். நோயாளிகளின் அதிகரிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி, அதிக எண்ணிக்கை என்பது கவலைக்குரியது அல்ல. ஆனால் இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்,” என்று கூறினார். ஒருவழியாக நமது சென்னை நமக்கே என்பது உறுதியாகிக் கொண்டிருக்கிறது!!

English: Siddharth Prabhakar

தமிழில்: லயா

கார்ட்டூன் கேலரி